நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் வரும் மார்ச் 31ம் தேதி வரை மூடல்! - கேளிக்கை விடுதிகள், பார்கள், கிளப்புகளை மூட தமிழக அரசு உத்தரவு

கோவை: கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றை வரும் 31ம் தேதி வரை மூட மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


கோவை: கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றை வரும் 31ம் தேதி வரை மூட மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை பாதித்தோர் எண்ணிக்கை 114ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களை மூட மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்தை மிக குறைந்த அளவில் பயன்படுத்தவும், தனியார் நிறுவனங்கள், ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகள், கேளிக்கை விடுதிகள், பார்கள், கிளப்புகள், அங்கன்வாடி மையம், உயிரியல் பூங்காக்கள், விளையாட்டு அரங்குகளை வரும் மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளார். அதே சமயம், 10, +2 அரசுத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் மருத்துவ மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய தண்டனை சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், பிற சட்டங்களின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் தவிர வேறு நிகழ்ச்சிகளை திருமண மண்டபங்களில் நடத்தக் கூடாது எனவும் திருமணங்களில் ஏராளமானோர் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் குறைந்த அளவே மக்கள் பங்கேற்க வேண்டும் எனவும் திருவிழாக்கள், துக்க நிகழ்வுகள் உள்ளிட்டவற்றில் அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதே போல, சுற்றுலா பயணிகள் தங்கும் இடம் அனைத்தும் மூடப்பட வேண்டும் எனவும் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

முகக்கவசம், சோப், திரவ சோப், கிருமி நாசினிகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள தமிழக அரசு, அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடைகள், மருந்து நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொருட்களை அதிக விலைக்கு விற்பவர்கள் பற்றி 044-2432138 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter