தமிழகம் முழுவதும் நேற்று ஜல்லிக்கட்டு விவகார போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இதில், மாணவர்களின் அறப்போராட்டத்திற்கு ஆதரவாக இருந்த வழக்கறிஞர்களையும் காவல்துறையினர் தாக்கினர்.
இந்த தாக்குதலால், பல மாணவர்கள், பெண்கள், வழக்கறிஞர்கள் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சில இளைஞர்கள் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து, மாணவர்கள் மீதும், பெண்கள், வழக்கறிஞர்கள் மீதும் தாக்குதல் நடத்திய காவல்துறையைக் கண்டித்து கோவை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில், கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தாக்குதல் நடத்திய காவல்துறையினரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
