கோவை மாநகராட்சி சீதாலட்சுமி மகப்பேறு மருத்துவமனை மையத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாநகராட்சியிலுள்ள அனைத்து மாநகராட்சி நகர்நல மையங்களில் இரத்த தானம் செயலியை துவக்கி வைத்து அம்மருத்துவமனையில் இரத்த தானம் செயலியை பதிவிறக்கம் செய்வதை இன்று பார்வையிட்டார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சியில் நகர்நல மையங்களில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மகப்பேறு சிகிச்சை, பிறந்த குழந்தைகளுக்கான தடுப்பூசிப் பணிகள், டெங்கு ஒழிப்புப் பணிகள், பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக இன்று மாநகராட்சி சீதாலட்சுமி மகப்பேறு மருத்துவமனை மையத்தில் இரத்த தானம் செயலியை துவக்கி வைத்து, இரத்த தான செயலி குறித்த இயக்கங்களும் மற்றும் சிறப்பம்சங்களும் அம்மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் பொதுமக்கள் தங்களுடைய ஆண்ட்ராய்டு கைப்பேசியில் உள்ள கூகுல் ப்ளே ஸ்டோரில் SOCIAL CAPITAL என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் டைப் செய்து இரத்த தானத்திற்கான செயலியை பதிவிறக்கம் செய்து இரத்த தானம் வழங்கலாம்.
மேலும், மருத்துவமனையில் இரத்தம் தேவைப்படும் பொழுது அது குறித்த உடனடி தகவல்களை இந்த செயலியை பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்தும் நபர்களுக்கு, மருத்துவமனையை சுற்றியுள்ள ஐந்து கிலோ மீட்டர் பகுதியிலுள்ள இரத்ததான கொடையாளர்களுக்கு உடனடியாக தகவல் அனுப்பப்படும்.
மேலும், அதை தெரிந்து கொண்டு விருப்பமுள்ள இரத்த கொடையாளர்கள் தகவல் அனுப்பிய மருத்துவமனைக்கு விரைந்து சென்று இரத்தம் கொடுத்து உதவலாம்.
எனவே, அவசரமாக இரத்தம் தேவைப்படும் பொது மக்கள் அவர்களின் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் மாநகராட்சி நகர்நல மையங்களை தொடர்பு கொண்டு இந்த செயலியின் மூலம் பயன் பெறலாம்.
மேலும், இந்த செயலியானது அனைத்து மாநகராட்சி நகர்நல மையங்களிலும் இன்னும் ஓரிரு மாதங்களில் செயல்படுத்தப்படும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், ராக் ரவீந்திரன், 168 முறை இரத்த தானம் வழங்கிய பிபி.அருண் கோகுல்தாஸ், மாவட்ட திட்ட மேலாளர் கோபால கிருஷ்ணன், ஷோஷியல் கேப்பிடல் ஒருங்கிணைப்பாளர் தினேஷ், மருத்துவமனை மருத்துவர்கள், சுகாதார செவிலியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.