மேட்டுப்பாளையம் பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் சார்பில் மேட்டுப்பாளையம் சமத்துவக் கழகம் மகளிர் அணி செயலாளர் சித்ரா, கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், பெள்ளாதி கிராமம் பகுதியில் உள்ள பஞ்சமி நிலம் சுமார் 4.22 ஏக்கரில் தாழ்த்தப்பட்ட மக்கள் 100 குடும்பம் கடந்த 6 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.
இப்பகுதியில் பட்டா வழங்கக் கோரி பல முறை வலியுறுத்தி மனு அளித்தும், பல வழிகளில் முயற்சித்தும் பட்டா வழங்கவில்லை.
இப்பகுதியில் இருந்து சுமார் 60 குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். பட்டா இல்லாததால் மின் விளக்கு இன்றி படிக்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.
அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, கழிப்பிடம் உள்ளிட்டவை எதுவும் பட்டா இல்லாமல் செய்துகொடுக்க மறுக்கின்றனர்.
எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.