கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் 30 மூட்டைகளில் 1.5 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
கோவை: கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு 4 பெண்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் இருந்து கேளராவிற்கு ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருவதை தடுக்கும் பொருட்டு, குடிமை பொருள் குற்றப்புலனாய்வு போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு உடனடியாக ஆய்வு மேற்கொண்ட போலீசார், அங்கு சந்தேகத்திற்கிடமாக வைத்திருந்த சுமார் 30 மூட்டைகளை சோதனை செய்தனர்.
சோதனையில், அந்த முட்டைகளில் சுமார் 1.5 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அரிசியை பறிமுதல் செய்த போலீசார் ராஜி, ரபியா, ஜோதி, மற்றும் பழனியம்மாள் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.