விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் 10 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் காந்திபுரம், சுந்தராபுரம் உள்ளிட்ட பத்து இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
இதில், காந்திபுரம் நகர பேருந்து நிலையம் முன்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது வறட்சி கடுமையாக பாதித்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பாலபாரதி குற்றம்சாட்டினார்.
மேலும், தமிழக அரசு செயல்படாமல் இருப்பதாக கூறிய அவர், சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தினர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 83 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதேபோல கோவை மாவட்டத்தில் பத்து இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.