கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் வரும் 24X7 குடிநீர் திட்ட செயல்பாடுகள் தொடர்பான 2 நாள் பயிற்சி வகுப்பு மற்றும் கருத்தரங்கில், 80க்கும் மேற்பட்ட திட்ட பொறியாளர்கள் பங்கேற்று விரிவான விளக்கமளிக்க உள்ளதாக தகவல்.
கோவை: கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பீளமேடு - அவிநாசி சாலையில் உள்ள VIJAY ELANZA ஹோட்டல் கூட்டரங்கில், அம்ரூத் திட்டம், 24X7 குடிநீர் திட்ட செயல்பாடுகள் குறித்த 2 நாள் பயிற்சி வகுப்பு மற்றும் கருத்தரங்கம் இன்று தொடங்கியது.
கோவை மாநகர மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் துணை மேயர் வெற்றிசெல்வன், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையாளா் மரு.மோ.ஷர்மிளா தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, கோவை மாநகராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் 24 மணி நேரமும் கிடைத்திட வழிவகை செய்தல், குடிநீரை 24 மணி நேரமும் வழங்குதல், குடிநீரை சேமித்தல், சுகாதாரமான குடிநீரை வழங்குதல் உள்ளிட்ட நோக்கத்தை அடிப்படையாக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 15 மாநகராட்சி, 12 நகராட்சி மற்றும் 1 பேரூராட்சிகளில் அம்ரூத் திட்டத்தின் கீழ் 24மணி நேர குடிநீர் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
கோவை மாநகராட்சி மற்றும் இதர மாநகராட்சிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி, பேரூராட்சி இயக்குநர் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறையிலிருந்து 80க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்றுள்ளனர்.
இவர்களுக்கு கோவை மாநகராட்சிக்கு தற்போது குடிநீர் விநியோகம் செய்யும் நீர் ஆதாரமாக உள்ள சிறுவாணி, வடவள்ளி, கவுண்டம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம், பில்லூர் 1, 2 திட்டம் மற்றும் பில்லூர் 3 திட்ட பணிகள் நடைபெற்று வருவது குறித்து விரிவாக எடுத்துரைக்க உள்ளனர்.
மேலும், 24 மணி நேரமும் குடிநீர் திட்டத்தில் ஜெராம் நகர் பகுதியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள். 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள், குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள், அதில் ஏற்படும் இன்னல்கள் என்னென்ன என்பது குறித்தும் விளக்கப்படுகிறது.
மேலும், தற்போது பணிகள் நடைபெற்று வரும் இடத்தை பார்வையிட்டு பொறியாளர்கள் ஆய்வு செய்கிறார்கள். இந்தியாவில் பூரி மாநகராட்சியில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. தற்போது கோவை மாநகராட்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து புனே பகுதியிலும் அம்ரூத் திட்டம் பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2 நாள் நடைபெறும் இந்த பயிற்சி மற்றும் கருத்தரங்கை பொறியாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
இவ்வாறு மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா பேசினார்.
இக்கூட்டத்தில் மாநகரப்பொறியாளர் இளங்கோவன், செயற்பொறியாளா் முருகேசன், TUFIDCO, State Mission management Ltd., Team leader ராஜா மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளாச்சித் துறைகளின் சார்பில் 80 மேற்பட்ட பொறியாளா்கள் மற்றும் சூயஸ் நிறுவனத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.