வால்பாறை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 12-ம் ஆண்டு தைப்பூசத்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 5-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவை தைபூச விழாக்குழு தலைவர் வள்ளிக்கன்னு துவங்கி வைத்தார்.

தொடர்ந்து 8-ம் தேதியன்று காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 2 மணிக்கு வால்பாறை எம்.ஜி.ஆர் நகர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் இருந்து திருமண சீர்வரிசை எடுத்து வந்து முருகன் வள்ளி தெய்வாணைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து பிரதோஷ வழிபாடுகளும் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து வியாழனன்று சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் நல்லகாத்து மைதானத்தில் இருந்து வால்பாறை ஓம்சக்தி வார வழிபாடு குழுவினரின் பால் குடம் மற்றும் சேசு நாடார் தைப்பூச மகளிர் குழுவினரின் கொடுமுடி தீர்த்தம் மற்றும் சேலம் மாதேஷ் அலகு பூட்ட லட்சுமணம் மற்றும் வால்பாறை முருக பக்தர்களின் அங்க அலகு பறவைக்காவடி ஊர்வலமாக வால்பாறை முக்கிய வீதிகளின் வழியாக முருகன் கோவிலை வந்து அடைந்தது.

தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்தினை வால்பாறை வட்டாட்சியர் கோமதி, டாக்டர் முனிசாமி, வனச்சரக அலுவலர் சேகர், காவல் ஆணையர் சுப்பிரமணியன், நகராட்சி ஆணையர் சம்பத்குமார் ஆகியோர் துவங்கி வைத்தனர்.

இத்திருவிழாவில் பல்வேறு நடன நாட்டிய நிகழ்ச்சிகள், கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம் ஒயிலாட்டம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தொடர்ந்து இரவு 8 முதல் 11 மணிவரை முருகன் திருவீதி உலா வால்பாறை முக்கிய வீதிகளில் நடைபெற்று, இரவு 12 மணிக்கு வான வேடிக்கையுடன் விழா இனிதே நிறைவடைந்தது. இதில், வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.