கோவை மாவட்டம், சிங்காநல்லூர் அருகே அமைந்துள்ள அண்ணாநகர் பகுதி மக்கள் தங்களது குடியிருப்பு பகுதிக்கு பட்டா வழங்க வேண்டும் என இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் அருகே அண்ணா நகர் பகுதியில் பல ஆண்டுகளாக நாங்கள் வசித்து வருகிறோம். மேலும், நாங்கள் மிகவும் வறுமையில் வாடி வருவதோடு எங்களுக்கு சொந்தமாக எவ்வித இருப்பிடமும் இல்லாமல் உள்ளோம்.
மேலும், நாங்கள வசிக்கும் குடியிருப்புகளுக்கு மின்சார வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
இந்நிலத்தில் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வந்தோம்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 10ம் தேதியன்று கோவை மாவட்ட நொய்யல் கிழக்குப் பிரிவு உதவிப்பொறியாளர் எங்களுடைய இடத்தினை 21 நாட்களுக்குள் காலிசெய்ய வேண்டும் என அறிவிப்பு கடிதம் கொடுத்தார்.
எங்களுக்கு இதைவிட்டால் வேறு குடியிருப்புகள் கிடையாது. எனவே நாங்கள் தற்போது வசிக்கும் பகுதியில் வீடுகளுக்கான பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.