முறையான சிகிச்சை அளிக்காமல் வெளியேற்றிய மருத்துவர்களை கண்டித்து தாராபுரம் அரசு மருத்துவமனை நுழைவுவாயிலில் அமர்ந்து நோயாளி தர்ணா.
தாராபுரம்: தாராபுரம் அரசு மருத்துவமனை நுழைவுவாயிலில் அமர்ந்து நோயாளி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கருங்காலிவலசு ஏடி காலனியை சேர்ந்த தம்பதி துரைசாமி - சகுந்தலா. இவர்களது மகன் விக்னேஷ்(வயது 23) பி. எட். பட்டதாரியான இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தலையில் காயம் ஏற்பட்டதாக, தாராபுரம் அரசு மருத்துவமனையில் உள் பிரிவு நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த நான்கு நாட்களாக தாராபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் ஸ்கேன் எடுப்பதற்காக விக்னேஷிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு பிறகு மூன்று மணி நேரம் கழித்து விக்னேஷை டீச்சார்ஜ் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
முறையாக சிகிச்சை அளிக்காமல் விக்னேஷை ஏமாற்றி கையெழுத்து பெற்று விட்டதாக கூறி முறையான மருத்துவர்களை கண்டித்து விக்னேஷ் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனை நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். முறையான சிகிச்சை அளிக்ககோரி கோஷங்களை எழுப்பினர்.
இவர்களிடம் தாராபுரம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.