நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு பகுதியில் பழங்குடியின பெண் ஒருவரை அடித்துக்கொன்ற ஒற்றைப் புலி, உடலை புதர்பகுதிக்குள் இழுத்துச் சென்று தின்ற சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு பகுதியில் யானை பாடி, லைட் பாடி, தேக்குபாடி உள்ளிட்ட 3 பழங்குடியின குடியிருப்புகள் உள்ளன.
இந்த குடியிருப்புகளை சுற்றி கடந்த இரண்டு மாதமாக சுற்றி திரிந்து வரும் ஒரு ஒற்றை புலி,பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. குறிப்பாக, கடந்த மாதம் மாதன் என்ற வேட்டை தடுப்பு காவலரை தாக்கியதில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த நிலையில், அந்த புலியை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு மாரி என்ற பெண்ணை அடித்து கொன்ற ஒற்றைப் புலி, உடலை புதருக்குள் இழுத்து சென்று சாப்பிட்டுள்ளது.
அந்த பெண்ணை நேற்று மாலை முதல் காணவில்லை என்று கூறி கிராம மக்கள் தேடினர். இரவு நேரம் என்பதால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து, இன்று காலை மீண்டும் தேடியபோது வளர்ப்பு யானை முகாம் அருகே குடியிருப்பு பகுதியை ஒட்டி உள்ள புதரில் மாரியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த வனத்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோனைக்காக உதகைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒற்றைப் புலியால் பழங்குடியினப் பெண் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.