பல்லடத்தில் புதிய மின் மயானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை மிரட்டும் திமுக நகர செயலாளர்? - பொதுமக்கள் புகார்!

பல்லடம் அடுத்த பச்சாபாளையம் பகுதியில் புதிய நவீன மின் மயானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை பல்லடம் திமுக நகர செயலாளர் ராஜேந்திர குமார் மிரட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் புதிய மின் மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை திமுக நகரச் செயலாளர் மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். வளர்ந்து வரும் பல்லடம் நகரத்தில் மின் மயானம் இல்லாததால் இப்பகுதியை சேர்ந்தவர்கள் திருப்பூர், கொடுவாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந்த நிலையில் பல்லடம் நகராட்சி கூட்டத்தில் 8 வது வார்டு பச்சாபளையத்தில், தமிழக அரசின் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.45 கோடி மதிப்பில் நவீன எரியூட்டு மின் மயானம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில், மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நவீன எரியூட்டு மின் மயானம் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பல்வேறு விதமான நோய் தொற்று ஏற்படும் என கருத்து தெரிவிக்கப்பட்டன.

இந்த மின் மயானம் அமைக்கப்படுவதற்கு அருகே 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில், அரசு பள்ளி உள்ளிட்டவை அமைந்துள்ளதாக கூறி தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி நவீன எரியூட்டு மின் மயானம் அமைப்பதற்கான பூமி பூஜை, கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திர குமார் தொடங்கி வைத்தார். இதனால் ஆத்திரமடைந்து, கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பச்சாபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இன்று பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.



இதில், கடந்த 9 மாதங்களாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்த அவர்கள், பணி தொடர்ந்து நடைபெற்றால் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைக்க போவதாக தெரிவித்தனர்.



மேலும் போராட்டங்களில் ஈடுபடுபவர்களை பல்லடம் திமுக நகரச் செயலாளர் ராஜேந்திர குமார் நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டினர்.

மேலும், நகராட்சி அலுவலகத்தில் நகர செயலாளருக்கு என்ன வேலை என கேள்வி எழுப்பிய பொதுமக்கள், மின்மயானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...