பெரும்பாண்மையை நிரூபிக்க சட்டப்பேரவை கூடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டப்பேரவையில் கூடினர். தொடர்ந்து, பன்னீர் செல்வம் அணியினரும், எதிர்க்கட்சியான தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ.க்களும் இன்று சட்டமன்றத்தில் கூடினர். காலை 11 மணியளவில் தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தில் தொடக்கம் முதலே எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், வேறு ஒரு நாளில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தி.மு.க., காங்கிரஸ், மற்றும் பன்னீர் செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முன் வைத்தனர். மேலும், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு சபாநாயகர் தனபாலின் மைக்கை உடைத்தனர். இதன் காரணமாக சட்டப்பேரவை மதியம் ஒரு மணிவரை ஒத்திவைக்கபட்டது.
பின்னர், 1 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவையில் மீண்டும் கூச்சல் குழப்பம் நீடித்தது. தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரகசிய வாக்கெடுப்பு கோரி சபாநயகரின் இடத்தை முற்றுகையிட்டனர். இந்த அமளியின் போது சபாநாயகர் தனபாலின் மேற்சட்டை கிழிக்கப்பட்டது.
தொடர்ந்து, இரண்டாவது முறையாக சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் மூன்று மணி வரை சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றவும் உத்தரவிடப்பட்டது.
ஆனால், வெளியேற மறுத்து தற்போது எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த சூழல் காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.