கோவை காந்திபார்க் முதல் கணுவாய் வரையிலான தடாகம் சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி அடிக்கல் நாட்டி ஓராண்டு மேலாகியும் துவங்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருவதாக ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாநகர பகுதியான காந்தி பார்க் முதல் கணுவாய் வரையிலான தடாகம் சாலையை நான்கு வழி சாலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு ஓர் ஆண்டு ஆகியுள்ளது.
இதற்கான பணிகள் இன்னும் துவங்கப்படாமல்இருப்பதாகவும், அதேபோல் அப்பகுதியில் குடிநீர் திட்டத்திற்கான குழாய் பதிக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துக்களும் நிகழ்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், கோவை மாநகர சாலை பயனாளர்கள் சங்கத்தினர் சாலை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்க பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மேலும், ஜீவா நகர், கே கே புதூர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்க பணிகளை துரிதப்படுத்தி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
முன்னதாக, முன்னாள் மாமன்ற உறுப்பினர் புருஷோத்தமன் முன்னிலையில் மனு அளிக்க வந்த அச்சங்கத்தினர், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.