தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வருகின்ற 19.02.2017 (முற்பகல் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை தொகுதி I–க்கு உட்பட்ட (Group I) பதவிக்கான எழுத்துத் தேர்வு நடத்தப்படவுள்ளது. கோயம்புத்தூரில் 35 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெறுகின்றது. இத்தேர்வினை 10208 நபர்கள் எழுதுகின்றனர். இத்தேர்வினை நடத்த 35 முதன்மை கண்காணிப்பாளர்கள், 10 மொபைல் அலுவலர்கள், 5 பறக்கும் படையினர், 24 வீடியோ கிராபர்கள் மற்றும் 35 ஆய்வு அலுவலர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இத்தேர்வில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு தேர்வு மையத்திற்கு செல்ல ஏதுவாக தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் பாதுகாப்பின் பொருட்டு போதுமான காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையத்திற்கு காவல்துறையினரால் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இத்தேர்வு எழுதும் தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டு (Hall Ticket) கொண்டு செல்ல வேண்டும் எனவும் தேர்வு அறைக்குள் மொபைல் போன் உள்ளிட்ட மின்னியக்க கருவிகளை எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுப்பட்டால் அவர்கள் எதிர்காலத்தில் அரசு தேர்வுகள் எழுத தடை செய்யப்படுவது மட்டுமின்றி அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.