கோவை ஈசா யோகா மையத்தில் மலை தள பாதுகாப்பு துறை அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலை திறப்பு விழாவிற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் சிலை திறப்பு விழாவிற்கு வரும் பிரதமர் நரேந்திரமோடிக்கு கருப்பு கொடிகாட்டப்போவதாக சமூக நீதிக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈசா யோகா மையமானது அமைந்துள்ளது. இங்கு 112 அடி உயரத்தில் பிரமாண்டமாக ஆதியோகி சிலையானது அமைக்கப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி சிலையை திறந்து வைக்கின்றார். இந்நிலையில் ஈசா யோகா மையமானது மலைதள பாதுகாப்பு துறையிடம் சிலை அமைக்க அனுமதி பெறவில்லை எனவும் அனுமதி இன்றி அமைக்கப்பட்ட சிலை திறப்பு விழாவிற்கு அனுமதி வழங்க கூடாது எனவும் கூறி கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரனிடன் சமூக நீதிக்கட்சியினர் இன்று மனு அளித்தனர். மேலும் அனுமதி பெறாத சிலையை திறக்க இந்திய பிரதமர் மோடி வந்தால் அவருக்கு கருப்பு கொடிகாட்டப்போவதாகவும் சமூக நீதிக்கட்சியினர் தெரிவித்தனர்.
மேலும் அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலை திறப்பு தொடர்பாக ஈசா மையம் வைத்துள்ளா விளம்பரங்களை அகற்ற வேண்டும் எனவும் சமூக நீதிக்கட்சியினர் தெரிவித்தனர். மேலும் கோவையில் அனைத்து துறைகளிலும் அனுமதி பெற்ற நிலையில் அம்பேத்கர் சிலையை அமைக்க அனுமதிக்காத மாவட்ட நிர்வாகம், மலைதள பாதுகாப்பு துறையில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலையை திறக்க அனுமதித்துள்ளதாகவும் சமூக நீதிக்கட்சியினர் குற்றம்சாட்டினர்.