திருப்பூர் மாவட்டம் அம்மாபாளையம் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த பாறைக்குழியில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர்: அம்மாபாளையம் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த பாறைக்குழியில் நள்ளிரவில் தீ வைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் - அவினாசி சாலை, அம்மாபாளையத்தில் குப்பைகள் கொட்டும் பாறைக்குழி உள்ளது. குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக தற்போது அங்கு குப்பை கொட்டப்படுவதில்லை.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு குப்பைகள் கொட்டப்பட்ட பாறைகுழியில் தீப்பற்றி எரிவதாக திருமுருகன்பூண்டி போலீசார் மற்றும் திருப்பூர் வடக்கு தீயணைப்புதுறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.
தகவலையடுத்து இரு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாக போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை ஒரு மணியளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
அப்பகுதிக்கு வந்த மர்மநபர்கள் யாராவது தீ வைத்து சென்றிருக்கலாம் என சந்தேகித்த திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.