பல்லடம் அருகே தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் திருவிழா, கடந்த 32 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ள நிலையில், இந்தாண்டு திருவிழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருவிழாவிற்கு தடை விதிப்பதை கண்டித்து பொதுமக்கள் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, அப்பகுதி மக்கள், அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ளிபாளையம் பகுதியில் கடந்த 32 ஆண்டுகளாக தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் 60 அடி குண்டம், பொங்கல் சாட்டு விழா கொண்டாடப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தாண்டு ஊர்மக்கள் விழா எடுத்து வரும் நிலையில் தனி நபர்களின் புகார் அடிப்படையில் விழாவிற்கு இந்துசமய அறநிலைத்துறை தற்காலிக தடை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதனை கண்டிக்கும் விதமாக கொங்காலி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தை அப்பகுதி மக்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் ராமசாமி மற்றும் காமநாயக்கன் பாளையம் காவல் ஆய்வாளர் ரவி, பஞ்சாயத்து தலைவர் சாந்தினி சம்பத்குமார் உள்ளிட்ட நான்கு தரப்பினர் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.