கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் பொது இடமான பூங்காவில் இருந்த 18 மரங்களை அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் வெட்டிய சம்பவம் தொடர்பாக காவல் நிலையம், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வனத்துறை உள்ளிட்ட அலுவலகங்களில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
கோவை: கோவை மாவட்டம் ஜி.என்.மில்ஸ் அருகே பொது இடத்தில் இருந்த 18 மரங்களை வெட்டிய நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
ஜி.என்.மில்ஸ் அருகிலுள்ள சான்பிரிக்ஸ் என்ற தனியார் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 25 தனித்தனி வீடுகள் உள்ளன.
மேலும் 50 சென்ட்டில் பார்க் அமைந்துள்ளது. இந்த பார்க்கில் 50க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தன.
இந்த பார்க்கில் பெரியவர்கள், பெண்கள் வாக்கிங் போகவும், குழந்தைகள் விளையாடவும் பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே வெயில் காலம் என்பதால் இங்குள்ள மரங்கள் அங்குள்ளவர்களுக்கு இதமான சூழலை தருகின்றன.
இந்த நிலையில் அப்பகுதியில் குடியிருக்கும் பிரகாஷ் என்பவர் இன்று காலை பார்க்கிலுள்ள 18 மரங்களை திடீரென வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து அந்த பகுதி மக்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர், காவல்துறையினர் மற்றும் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுக்கும் புகாரை வைத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.
சுமார் அரை மணி நேரத்தில் வெயில் காலத்தில் நிழல் தந்த 18 மரங்களை வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.