கோவை ராஜ வீதியில் உள்ள நகைக்கல் கடையில் புகுந்த நபர்கள் கத்தி முனையில் 4.5 கிலோ தங்க நகைகளை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பெரிய கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் ராஜ வீதி பகுதியில் தங்க நகை மொத்த வியாபரம் செய்து வருகிறார்.

சந்திரசேகரின் கடையில் ஒட்டுநர் ரியாசுதின் உள்ளிட்ட 4 பேர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் இன்று மாலை சந்திரசேகர் வீட்டிற்கு சென்றிருந்த நேரத்தில் ரியாசுதீன் மற்றும் முகமூடி அணிந்த இரு மர்ம நபர்கள் கடைக்குள் நுழைந்தனர். அப்போது, ஊழியர்கள் கீதா, ரேவதி என்ற இரு பெண்கள் பணியில் இருந்தனர்.
தொடர்ந்து, ரியாசுதின் மற்றும் முகமூடி அணிந்து வந்த இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி பெண்களை மிரட்டியதோடு கண்களை மூட கூறினர். பின்னர், கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 4.5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாகவும், அதன் மதிப்பு ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் இருக்குமெனவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து, பணியில் இருந்த பெண்கள் சந்திரசேகருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து, அவர் அளித்த புகாரின் பேரில், வெரைட்டி ஹால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ராஜவீதி முக்கிய பகுதி என்பதால் அங்கு பல இடங்களில் காவல் துறையினர் கண்காணிப்பு காமிராக்களை அமைத்துள்ளனர். அதோடு, கொள்ளை நடந்த இடத்தின் அருகில் தனியார் வைத்திருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் கொண்டு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
பட்டப்பகலில் கோவையில் மையப்பகுதியில் நடந்த இந்த துணிகரக்கொள்ளை அப்பகுதியில் நகைக்கடை வைத்திருக்கும் வியாபாரிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.