முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பெரியார் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்த பாஜக பெண் ஆதரவாளரான உமா கார்க்கி கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது திமுக ஐடி விங் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை: தமிழக முதல்வர் மற்றும் தந்தை பெரியார் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக பாஜக பெண் ஆதரவாளரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையை சேர்ந்த பாஜக பெண் ஆதரவாளரான உமா கார்க்கி என்பவர், தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் தந்தை பெரியார் மற்றும் தமிழக முதல்வர் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் திமுக ஐடி விங்கை சேர்ந்த ஹரீஸ் என்பவர் இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் சிக்கியுள்ள பாஜக பெண் ஆதரவாளர் உமா கார்க்கிக்கு பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு சமூக செயல்பாட்டாளருக்கான விருது வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் உமா கார்க்கி அன்மையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பெரியார், அம்பேத்கரை படிக்க அறிவுறுத்தியதை மேற்கோள் காட்டியும் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றியும் அவதூறாக கருத்துகளை வெளியிட்டுள்ளது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.