செந்தில் பாலாஜி மீது நீதிமன்ற உத்தரவு படி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால் மத்திய அரசு பழி வாங்குகிறது என நடிக்கிறார்கள். பழிவாங்குவதாக வைத்துக் கொண்டாலும் தவறு செய்தீர்களா? இல்லையா? என எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை: மத்திய அரசு பழிவாங்குவதாக கூறும் திமுகவினர், செந்தில் பாலாஜி தவறு செய்தாரா இல்லையா என கூறவேண்டும் என தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க திமுக அரசை கண்டித்தும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அதிமுக சார்பில் செஞ்சிலுவை சங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டாஸ்மாக்கில் தான் நம்பர் ஒன். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நீதிமன்ற உத்தரவு படி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால் மத்திய அரசு பழி வாங்குகிறது என நடிக்கிறார்கள்.
சரி பழி வாங்குவதாகவே வைத்துக் கொண்டாலும் நீங்கள் தவறு செய்தீர்களா? இல்லையா?. மது பாட்டில்களுக்கு பத்து ரூபாய் அதிகமாக வாங்கினீர்களா இல்லையா?. மதுபானங்களை தொழிற்சாலையில் இருந்து சீல் இல்லாமல் கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.
இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை அடிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 4000 பார்கள் பணம் கட்டாமல் நடத்தப்பட்டு வருகிறது. அப்போது அதில் வரும் பணங்கள் எல்லாம் எங்கு சென்றது?.
செந்தில் பாலாஜி நன்றாக இருக்கட்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் தவறு செய்து விட்டு மருத்துவமனையில் இருக்கும் பொழுது குடும்பமே (மு.க.ஸ்டாலின் குடும்பம்) சென்று மருத்துவமனையில் இருக்கிறது.
முதலமைச்சருக்கு நாட்டு நடப்பு என்னவென்று தெரியாது. பல்வேறு ஊடகங்கள் இவர்களால் மிரட்டப்படுகிறார்கள். இந்த ஆட்சி வீட்டிற்கு செல்ல வேண்டும் என மக்கள் பலரும் நினைக்கிறார்கள். எப்போது சட்டமன்ற தேர்தலில் வந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெறுவார்.
காவல்துறையில் இருக்கும் ஐஜி டேவிட்சன் மற்றும் உதய்சந்திரன் ஆகிய இருவரும் தான் ஆட்சியை இயக்குகிறார்கள். நாங்கள் நேர்மையான காவல் துறையை வைத்திருந்தோம் ஆனால் இப்பொழுது உள்ள காவல்துறை அடிமை காவல்துறையாக உள்ளது.
50 ஆண்டு கால வளர்ச்சியை நாங்கள் அளித்துள்ளோம். கோவையில் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்கள் முடிக்கப்படாமல் உள்ளது. தற்போது நடைபெற்று வரும் பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம் எங்களை தோற்கடித்த பாவம் தான்.
தினமும் 5000 லோடு கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்துகிறார்கள். அனைத்து அலுவலகங்களிலும் லஞ்சம் பெறப்படுகிறது. இங்குள்ள பிரச்சனைகளை சரி செய்யாமல் உத்தமபுத்திரன் போல் நான் அடித்தால் தாங்க மாட்டீர்கள் என முதல்வர் பேசி வருகிறார்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது, இதை கட்டுப்படுத்த வேண்டும் என நாங்கள் நாள்தோறும் வலியுறுத்தி வருகிறோம். திமுகவினரே இன்றைக்கு திமுகவிற்கு வாக்களிப்பதற்கு தயாராக இல்லை. திமுக தலைவர்கள் எல்லாம் காந்தியவாதிகள் போல் அவர்களை நடத்துகிறார்கள்.
கோவையில் இன்னொரு முறை பஞ்சாயத்து தலைவர் யாருக்கு எனும் பிரச்சனை வந்தால் நாங்கள் அனைவரும் அங்கு ஒன்றிணைவோம். மாவட்ட ஆட்சியர் அரசு அதிகாரிகள் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும்.
காவல்துறையினருக்கு குற்றவாளிகளை பிடிப்பதற்கெல்லாம் நேரமில்லை அதிமுகவினர் எங்கு போஸ்டர் ஓட்டுகிறார்களோ அதை அகற்றுவதுதான் அவர்கள் வேலையாக உள்ளது. எனவே இந்த ஆட்சி வீட்டிற்கு செல்ல வேண்டும், மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியில் இருந்து இறங்க வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வரவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.