கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ஈஷா யோகா மையம். இங்கே, மெர்க்குரி உள்ளிட்ட பாதரசங்களால் ஆன சிலை அடங்கிய சூரிய குண்டம் என்னும் நீராடும் பகுதியில் குளித்த கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த மன்னார்சாமி என்பவரது மகன் ரமேஷ் (21). வேலூர் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்றில் சிவில் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், சகமாணவர் அனைவரும் இணைந்து உதகைக்கு சுற்றுலா செல்வதற்காக திட்டமிட்டுள்ளனர். அதன்படி இன்று காலை உதகை செல்லும் முன்பாக வெள்ளியங்கிரி மலையடிவாரப் பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு, சூரிய குண்டம் என்னும் நீராடும் பகுதியில் மாணவர்கள் குளித்துக்கொண்டிருந்த நிலையில் ரமேஷ்-க்கு அதிகப்படியான குளிரின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆனால், பொது மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்போது உயிரிழந்த மாணவரின் உடல் கோவை அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலந்துரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுற்றுலாவிற்காக ஈஷா யோகா மையத்திற்கு வந்த மாணவர் உயிரிழந்த சம்பவம் சகமாணவர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.