கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், பணியிலிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்த ஒப்பந்தத் துப்புரவுப் பணியாளர் ரமேஷின் குடும்பத்தினரை இன்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு 81-ல் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்த எஸ்.ரமேஷ் என்பவர் கடந்த 8.03.2017 அன்று பணியிலிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்தார்.
அவரின் குடும்பத்தினரை இன்று கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், ஒப்பந்த துப்புரவுப் பணியாளராக பணியில் இருந்த போது உயிரிழந்த ரமேஷின் குடும்பத்திற்கு சேரவேண்டிய இழப்பீட்டுத் தொகை மற்றும் இதர பயன்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், பணியின் போது இறந்த ஒப்பந்த பணியாளருக்கு ஈடாக அவரது குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர பணி வழங்குவதற்கு அரசு ஆணையில் வழிவகை இருப்பின் அவற்றை ஆராய்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார் மற்றும் துப்புரவுப் பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.