கோவை வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவினாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்ட இயக்கத்தினர் மனு அளித்தனர்.
சேலம் மற்றும் எடப்பாடியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமானம் மூலம் கோவை வந்தார். அவரை மாவட்ட, மாநகராட்சி, காவல்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து அவரை நேரில் சந்தித்த அவினாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் அத்திக்கடவு வேலுநாச்சியார் இயக்கத்தினர் மனு ஒன்றை அளித்தனர்.
அம்மனுவில் அவினாசி அத்திக்கடவு திட்டத்தை தேசிய பேரிடராக கருதி உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர், அவினாசி அத்திக்கடவு திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்ற உறுதிபூண்டிருந்ததாகவும், இது தொடர்பாக கோவை வந்த பிரதமர் மோடியிடமும் தாம் வலியுறித்தியிருந்ததாகவும் தெரிவித்தார்.
அவினாசி அத்திக்கடவு இத்திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அப்போது உறுதியளித்தார். இதை தொடர்ந்து சேலத்திற்கு கார் மூலம் முதலமைச்சர் புறப்பட்டு சென்றார். முதலமைச்சர் வருகையை ஒட்டி கோவை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.