கோவையில் திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவ்வமைப்பின் தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தியுள்ளார்.
கோவை உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பாரூக். 31 வயதான இவர் உக்கடம் பழைய இரும்பு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்தார். மேலும் பாரூக் திராவிடர் விடுதலை கழகம் அமைப்பிலும் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் வியாழக்கிழமை பாரூக்கின் செல்போனிற்கு அழைத்த மர்ம நபர் தொழில் சம்மந்தமாக பேச வேண்டுமென, உக்கடம் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் பண்ணை அருகே வருமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து தனது இரு சக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு வந்த பரூக்கை ஏற்கனவே அங்கு காத்திருந்த மர்ம நபர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பாரூக் உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த உக்கடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, திராவிடர் விடுதலை கழகம் அமைப்பில் செயல்பட்டு வந்த பாரூக், மத மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவு கருத்துக்களை பேசியும், எழுதியும் வந்ததால் ஏற்பட்ட விரோதத்தினால் கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், பாரூக் உடல் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் ஆகியோர் பாரூக்கின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் மணி, மதங்களுக்கு எதிரான கருத்துக்களை முன் வைப்பவர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருவதாகவும், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இதனிடையே இந்த கொலை குறித்து 4 தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.