காவல் துறையை பெருமைப்பட வைக்கும் சமூக காவலர்!


நாடெங்கிலும் சமூக சேவகர்கள் மக்கள் பணியை செய்து கொண்டிருக்க, அவர்களுக்கு பாதுகாப்பு கொட்டுப்பதோடு ஒரு காவலரின் பணி முடிந்து விடுவதில்லை. இதற்கு மிகச்சரியான உதாரணமாக உள்ளார் காவல் ஆய்வாளர் ஒருவர். மதுரை மாவட்டம் கருமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யர் சாமி. 53 வயதான இவர் கோவை மாநகர காவல் துறையில் போக்குவரத்து ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். 



‘பணிக்கு செல்வதோடு என் பணி முடிந்து விடுவதில்லை’ என்ற கோட்பாட்டை கடைபிடிக்கும் இவர், பல ஏழை குடும்பங்களுக்கும், குழந்தைகளுக்கும் உதவி செய்பவராகவும், சமூக சேவகராகவும், ஒரு சூழல்வாதியாகவும் வலம் வருகிறார்.  

ஐயோ..! போலீஸ் வருது.,! என்று காவல் துறை காலடி சத்தம் கேட்டாலே பயந்து ஓடுபவர்கள் இன்னும் கொஞ்சம் இருக்க, தனது கனிவான பேச்சாலும், பாரபட்சம் பாராத அன்பாலும் பலருக்கும் பிடித்த போலீஸ்காரராக இருக்கிறார். 

தனது சமூகப்பணிகள் குறித்து அய்யர் சாமி சிம்ப்ளி சிட்டிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 

மதுரை மாவட்டம் கருமாத்தூர் என்ற கிராமம் தான் எனது சொந்த ஊர். 17 வயதில் எங்கள் தொகுதி எம்.எல்.ஏ. என் கிராமத்திற்கு வந்தார். அப்போதெல்லாம், ஒரு எம்.எல்.ஏ. விடம் பேசுவது என்பது மிகப்பெரிய விசயமாய் இருந்தது. அப்போது, எனது வீதியில் தெருவிளக்குகள் இல்லை என்பதை அவரிடம் தைரியமாக சொன்னேன். உடனடியாக எங்கள் வீதிக்கு தெருவிளக்குகள் அமைத்து கொடுத்தார். 

அப்போது கிடைத்த பாராட்டுகள் எனது சமூகபணிக்கு ஊக்கமளித்தன. தொடர்ந்து, சாதி மற்றும் மத ஒழிப்பிற்காக பல போராட்டங்களில் ஈடுபட்டேன். எனது 20 வயதில் காவல்துறையில் சாதாரண காவலராக பணியில் சேர்ந்தேன். மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமே இந்த பணிக்கு என்னை அழைத்து வந்ததாக நினைக்கிறேன். 

1984-ல் கோவை வந்து பணியில் சேர்ந்தேன். இங்கு நிறைய குழந்தைகள் மற்றும் ஆதரவற்றோர் காப்பகங்கள் இருந்தது தெரியவந்தது. அப்போது முதல் என்னால் முடிந்த சிறு சிறு உதவிகள் செய்து வந்தேன். 

தனி ஒருவன்

ஒருவனை பசியோடு வைத்திருப்பது பாவம். அதை உணர்ந்து உணவு இல்லை என்ற நிலை யாருக்கும்  வரக்கூடாது என்ற கொள்கையை வகுத்து, என்னால் முடிந்தவரையிலான உதவிகளை ஏழை மக்களுக்கு செய்து வந்தேன். எனது செயலை அறிந்த சக போலீசார் என்னோடு சேர்ந்து சமூக சேவையாற்ற விரும்பினர். அதன் விளைவாக கடந்த 2009-ம் ஆண்டு ‘காவலர் காக்கும் கரங்கள்’ என்ற ஒரு குழுவை உண்டாக்கினோம். அதில் சுமார் 50 போலீசார் உறுப்பினராக உள்ளனர். 



இந்த குழுவின் மூலம் இது வரை 36 காப்பகங்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுள்ளது. தனி ஒருவனாக இருந்த நான் ஒரு குழுவாக இணைந்து சேவைப்பணியை செய்த போது ஏழை மக்களுக்கு போர்வை, குழந்தைகளுக்கு கல்வி உபகரனங்கள் வழங்குவது, ஆதரவற்றோருக்கு புதிய ஆடைகள் வழங்குவது என பல உதவிகள் செய்ய முடிந்தது. 

இயற்கை வாழ்வியல்

நான் இயற்கை வாழ்வியலை பெரிதும் விரும்புகிறவன்.  ஒரு மனிதன் இயற்கையை சார்ந்து வாழும் வரை உடலளவிலும், மனதளவிலும் அவனை எந்த பிரச்சனைகளும் நெருங்காது. இயற்கைக்கு முரண்பட்டு நடக்கும்போது தான் மனிதன் பிரச்சனைகளை சந்திக்கிறான். இதை அவ்வப்போது, சக நண்பர்களிடம் கூறுவேன். இயற்கை வாழ்வியலை விரும்புபவர்களுக்கு, நம் பாரம்பரிய மரக்கன்றுகளை வாங்கி இலவசமாக கொடுப்பேன். 

பணம் கொடுத்து மரக்கன்றை வாங்குவதற்கு நாமே ஒரு கார்டன் அமைத்தால் என்ன என தோன்ற, அன்றைய காவல் துறை ஆணையரிடம் ஒப்புதல் பெற்று, கடந்த 2010-ம் ஆண்டு காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் ஒரு கார்டன் அமைத்தேன். விதைகளை வாங்கி மரக்கன்றுகளை வளர்த்து தற்போது மக்களுக்கு வழங்கி வருகிறேன். தினமும் காலை அங்கு சென்று பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.  நமது பாரம்பரிய மரங்களான பூவரசு, வேம்பு, புங்கை, புளியமரம் உள்ளிட்ட 7 வகை மரங்கள் தற்போது உள்ளது. 



மரக்கன்றுகளை கொடுப்பது மட்டும் போதாது, அதை நன்கு வளர்க்கிறார்களா? என்று ஆய்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி, மரக்கன்றுகள் கொடுத்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று அவ்வப்போது பார்வையிடுவேன். இதுவரை 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கியாகிவிட்டது. மேலும், சீமை கருவேல மரங்களை அகற்றுவது உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறேன்.

மகிழ்ச்சி

கோவைப்புதூர் அருகே ஒரு பாதிரியாரிடம் 500 மரக்கன்றுகளை கொடுத்தேன். சிறிது நாட்களுக்கு பிறகு அங்கு சென்று பார்த்த போது அதில் ஒரு மரக்கன்று கூட வீண் போகாமல், அனைத்தும் வளரத்தொடங்கி இருந்தது. இப்போது அந்த இடம் சிறிய சோலைக்காடு போல மாறியிருப்பதை கண்டு அனுதினமும் மகிழ்ச்சியடைந்து வருகிறேன். இதே போல, கோவை மாநகர காவல்துறை சார்பில், காப்பகங்களில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசளிக்கும் விழாவை ஏற்பாடு செய்தேன். தொடர்ந்து, 5 ஆண்டுகள் வெற்றிகரமாக இந்த விழாவை நடத்தி முடித்துவிட்டேன். எனது வாழ்வில் நான் செய்த சாதனையாகவே இதை கருதுகிறேன். 

லட்சியம் 

அரசு கொடுக்கும் வருவாய் எனக்கு அதிகமாகவே உள்ளது. அதனால், எனது ஊதியத்தில் 30 சதவிகிதத்தை இந்த சமூக பணிகளுக்காக செலவிட்டு வருகிறேன்.

கோவைப்புதூர் அருகே எனக்கு வீடு ஒன்று உள்ளது. எனது இறுதி காலத்தில் அந்த வீட்டை விற்றுவிட்டு, கிராமப்புரத்தில் இடத்தை வாங்கி அங்கு முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம். தற்போது அதை நோக்கி பயணிக்க தொடங்கியிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

சுயநலமற்ற பொறுப்புணர்வு அய்யர் சாமியின் வார்த்தைகளின் வழியே வெளிப்பட, காவல் துறை அதிகாரிகளிடம் இவரைபற்றி கேட்க, அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றனர். 

இந்த சமூக காவலர் குறித்து கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் கூறுகையில், 'ஒரு காவல் துறை ஆய்வாளர் என்பதையும் தாண்டி அய்யர்சாமி சிறப்பாக பணியாற்றி வருகிறார். ஒவ்வொரு காவல் துறை அதிகாரிக்கும், இனி வர இருக்கும் அதிகாரிகளுக்கும் இவர் ஒரு முன்உதாரணமாக இருப்பது பெருமையாக உள்ளது. 

ஏழைகளுக்கு உதவுவது தொடங்கி, மரக்கன்றுகளை வழங்கி நாட்டை காப்பது வரை அய்யர் சாமி செய்யும் சமூக சேவைகள் ஏராளம்' என்றார். 

அய்யர்சாமி போன்ற சமூக கவலர்கள் தமிழக காவல்துறையில் பணியாற்றும் போது, அவ்வப்போது காவல்துறை மீது மக்களுக்கு எழும் முரண்பாடான கருத்துக்கள் கூட தவிடுபொடியாகிவிடுகின்றன. 

காவல்துறையின் சமூக சேவைகள் தொடர வாழ்த்துக்கள்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...