சென்னையில் பல்வேறு இடங்களில் நில மோசடியில் ஈடுபட்டதாக பிரபல கட்டுமான நிறுவனமான காசா கிராண்டே நிர்வாக இயக்குநர் அனிருதன் உள்பட 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல கட்டுமான நிறுவனமான காசா கிராண்டே, கோவை, பெங்களூர், கொச்சி மற்றும் துபாய் உள்ளிட்ட இடங்களில் வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறது.
இந்த நிறுவனம், சென்னை பள்ளிக்கரணையில் வீடு கட்டித்தருவதாகக் கூறி 20 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக எழும்பூரில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவின் நில மோசடி தடுப்புப் பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து, காசா கிராண்டே நிறுவன நிர்வாக இயக்குநர் அனிருதனை கைது செய்த போலீசார், சென்னை எழும்பூரில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், சென்னை முகப்பேரில் இயங்கிவரும் திரு பிரமோட்டர்ஸ் நிறுவன அதிபர் குமார், வீட்டுமனை வாங்கி தருவதாகக் கூறி 200-க்கும் மேற்பட்டவர்களிடம் 3 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாகவும் மத்தியக் குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து, திரு பிரமோட்டர்ஸ் அதிபர் குமாரையும் கைது செய்து மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.