மைசூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் வழித்தடம் தான் இந்த கோவை – பொள்ளாச்சி சாலை. குறுகலான பாதையாக இருந்த இந்த வழித்தடத்தில் ஆயிரக்கணக்கான விபத்துக்கள் பல உயிர்பலிகள் நடந்ததை தொடர்ந்து, சாலை விரிவாக்கம் வேண்டி பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் விளைவாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சாலை விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டு தற்போது விரிவாக்கப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. பொள்ளாச்சியை ஒட்டிய ஆச்சிப்பட்டி தொடங்கி ஈச்சனாரி அருகே உள்ள எல் அண்ட் டி பைபாஸ் சாலை வரையில் சுமார் 26 கி.மீ தூரத்திற்கும். அங்கிருந்து ஆத்துப்பாலம் வரையிலும் இந்த விரிவாக்கப்பணி நடைபெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

4 வழிச்சாலையாக மாறி வரும் இந்த சாலைக்காக வழி நெடுகிலும் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. சுட்டெறிக்கும் சூரிய வெப்பம் சாலையில் விழாத வண்ணம் சாலையோரத்தில் குடைவிரித்திருந்த மரங்கள் தற்போது இருந்த இடமே தெரியாமல் மாறியிருக்கிறது.

இந்த நிலையில், கண்துடைப்புக்கு ஒரு சில மரங்களை வேரோடு பிடுங்கி வேறு ஒரு இடத்தில் நடவு செய்து விட்டு ஆயிரக்கணக்கான மரங்களை விறகுகளாக்கிவிட்டது அரசு என்று இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தட்பவெப்பநிலையை பாதுகாப்பதில் முக்கியப்பங்கு வகிப்பவை மரங்கள். சாலை விரிவாக்க பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக எத்தனை மரங்களை நெடுஞ்சாலை துறை நடவு செய்துள்ளனர் என்ற கேள்வியையும் இயற்கை ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து சூழலியல் ஆர்வலர் பாண்டிய ராஜன் கூறியதாவது:- கோவை–பொள்ளாச்சி சாலை விரிவாக்கப்பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை தொடர்ந்து ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து ஈச்சனாரி வரையிலும் 290 மரங்கள் வெட்டப்பட்டது. அதில் 7 வேப்பமரங்கள், 47 பனை மரங்கள் அடங்கும்.
‘தென்னை வைத்தவன் சாப்பிட்டு சாவான்; பனை வைத்தவன் பார்த்துட்டு சாவான்’ என்றொரு பழமொழி உண்டு. ஒரு பனைமரம் வளர்ந்து அதன் பயனை பெற பல ஆண்டுகள் ஆகும் என்பதே இதன் பொருள். அப்படியாக சுமார் 100 ஆண்டுகள் வளர்ந்த பனைமரங்களை அடியோடு வெட்டி சாய்த்து விட்டனர். மேலும், குறிச்சி குளம் அருகே இருக்கும் 150 வருட பழமையான ஆலமரத்தை வெட்ட முயற்சி நடந்தது. அப்போது பல சமூக ஆர்வலர்கள் போராடி அந்த மரத்தை காப்பாற்றுள்ளோம். சில நாட்களில் அந்த மரம் வேரோடு பிடுங்கி வேறு ஒரு இடத்தில் நடவு செய்யப்பட்ட உள்ளது.
ஈச்சனாரியில் இருந்து பொள்ளாச்சி ஆசிப்பட்டி வரையிலும் 2000க்கும் மேறபட்ட மரங்கள் வெட்டப்பட்டது. இது மத்திய அரசின் கையில் உள்ள சாலை என்று அரசு கையை விரித்தது. இந்த பிரச்சனைகள் தொடர்பாக வழக்கு தொடர்ந்தால், வளர்ச்சிக்கான பணிகள் என்று கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விடுகிறது.

முதலில் அவினாசி சாலை, பாலக்காடு சாலை, மேட்டுபாளையம் சாலை, மருதமலை சாலை போன்ற சாலைகளில் இருந்த பசுமையை விரிவாக்கப்பணி என்று கூறி அழித்தனர். இப்போது, இறுதியாக கோவை – பொள்ளாச்சி சாலையல் இருந்த மரங்களையும் வெட்டிவிட்டனர்.
எத்தனை மரங்கள் நடவு செய்யப்படும் உச்ச நீதிமன்றத்தின் உத்தவரவின்படி, ஒரு மரம் வெட்டப்பட்டால் 4 முதல் 6 மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும். இப்போது வெட்டப்பட்ட 2000க்கும் அதிகமான மரங்களுக்கு ஈடாக எத்தனை மரங்களை இந்த அரசு செய்யப்போகிறது.
தன்னார்வலர்கள் பலர், பொது இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து வருகின்றனர். அவர்கள், தற்போது இந்த சாலையில் மரக்கன்றுகளை நடவு செய்தாலும், குறைந்தது 20 ஆண்டுகளில் வளர்ச்சி என்ற போர்வையில் அந்த மரங்களும் வெட்டப்பட்டுவிடும். ஒரு மரம் வெட்டப்படும்போது அதை நட்டவனுக்குதான் அதிக வலி இருக்கும்.
தீர்வு என்ன?
தற்போது வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக அப்பகுதிகளில் இருக்கும் பள்ளிகள், கோவில்கள் மற்றும் பொது இடங்களில் மரங்களை அரசு தரப்பில் நடவு செய்ய வேண்டும். இயற்கையை காப்பாற்ற நினைக்கும் ஒவ்வொருவரும் இதை செய்தால் தான் கோவை மாவட்டத்தை வாழ தகுதியான ஊராக அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல முடியும். இவ்வாறு பாண்டியராஜன் கூறினார்.
வளர்ச்சி என்பது சமூகத்துக்கானது என்பது மறுக்க முடியாத உண்மை. அதே நேரத்தில், அந்த வளர்ச்சியானது அடுத்த தலைமுறையை எந்தவிதத்திலும் பாதிக்காதவாறு வழிப்படுத்துவது அரசின் கடமை. எனவே, இந்த சூழல் பிரச்சனையை அரசு தனிக்கவனத்தில் எடுத்து, கோவை – பொள்ளாச்சி சாலையை மீண்டும் இயற்கை எழில் கொஞ்சும் சாலையாக மற்ற வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.