பயணச்சீட்டு வழங்குவதில் பேருந்து நடத்துனருக்கும், காவலருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தில் நடத்துனரை கத்தியால் குத்திய ரயில்வே காவலரை பிடித்த காந்திபுரம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கோவையை நோக்கி இன்று காலை அரசு பேருந்து வந்துகொண்டிருந்தது. இதில் கோவை போத்தனூர் ரயில்வே காவலர் சிவராமசந்திரன் கோவை உக்கடத்திற்கு பயணச்சீட்டை பெற்று பயணம் செய்துள்ளார்.
பின்னர் பேருந்து உக்கடம் பேருந்து நிலையம் வந்தபின்னர் நடத்துனர் பாண்டியராஜன், காவலர் சிவராமசந்திரன் வாங்கிய பயணச்சீட்டு உக்கடம் வரை மட்டுமே செல்லும் என்றும், காந்திபுரம் செல்லவேண்டுமானால் மீண்டும் பயணச்சீட்டு வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதற்கு சிவராமச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியநிலையில் காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே வரும் போது கோபம் அடைந்த காவலர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாண்டியராஜன் காலில் குத்தியுள்ளார்.
இதனைக்கண்ட பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறியுள்ளனர். உடனே பேருந்து ஓட்டுனர் காட்டூர் காவல் நிலையத்திற்கு பேருந்தை கொண்டு சென்று நிறுத்தியுள்ளார்.
இதனையடுத்து கத்திக்குத்தில் காயமடைந்த நடத்துனர் பாண்டியராஜனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
தொடர்ந்து, ரயில்வே காவலர் சிவராமச்சந்திரனை காட்டூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.