தமிழகத்தின் பல்வேறு துறைகளில் தனித்து விளங்குபவர்களுக்கு, அவர்களது திறமைகளை உலகறியச்செய்ய ரவுண்ட் டேபிள் என்கிற அமைப்பு சார்பில் ஆண்டு தோறும் ‘பிரைட் ஆப் தமிழ்நாடு’ என்கிற விருது வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் 14 துறைகளில் உள்ள திறமை வாய்ந்தவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மக்கள் அளிக்கும் வாக்குகள் மூலமாக இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இதில் விளையாட்டு துறைக்கான விருதை கோவை மாவட்டம் பி.என். புதூரை சேர்ந்த தர்ஷினி என்ற 8 வயது சிறுமி தட்டிச்சென்றுள்ளார்.
இது குறித்து தர்ஷினி நம்மிடம் கூறியதாவது :-
நான் கணுவாய் அருகே உள்ள யுகபாரதி என்ற பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறேன். நான் பயிலும் பள்ளியில் ஸ்கேட்டிங் விளையாட்டு கற்றுத்தரப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்த ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வருகிறேன். அந்த வருடமே மாவட்ட அளவில் நடந்த போட்டியில் முதல் பரிசு பெற்றேன். அப்போது அனைத்து தரப்பினரும் என்னை பாராட்டினர்.

பின்னர், எனது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தால் தொடர்ந்து ஸ்கேட்டிங் பயிற்சி பெற்றேன். தமிழ்நாடு மாநில ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கமும், புதுச்சேரியில் நடந்த இரண்டாம் தென் மண்டல ஓபன் மாநில ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 150 மற்றும் 500 மீட்டர் பிரிவுகளில் இரண்டு தங்கப் பதக்கங்களையும், 6-வது மேற்கு மண்டல ஓபன் மாநிலரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கபதக்கமும் பெற்றேன்.

இந்த வெற்றிகளை தொடர்ந்து, ‘Asia Book of Record’ என்ற சாதனைக்கு முயற்சி செய்தேன். 41 நிமிடங்களில் 10.5 கி.மீ தூரம் ஸ்கேட்டிங் செய்து ‘Asia Book of Record’ புத்தகத்தில் இடம் பிடித்தேன். இந்த சாதனையை தொடர்ந்து தான் ‘பிரைட் ஆப் தமிழ்நாடு’ விருதுக்கு எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
தமிழக மக்கள் எனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்தனர். இந்த சாதனைக்கு எனது பெற்றோரும், ஆசிரியர்களும் தான் காரணம். இந்த விருது என்னை பெருமையடைய செய்துள்ளது.
தொடர்ந்து, நல்ல முறையில் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற வேண்டும் என்பது எனது எதிர்கால லட்சியமாக உள்ளது.
இவ்வாறு தர்ஷினி கூறினார்.

தர்ஷினி-யின் தந்தை கண்ணன் கூறுகையில், ‘எனது மகளுக்கு ‘பிரைட் ஆப் தமிழ்நாடு’ விருது கிடைத்தது பெருமையாக உள்ளது. ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒரு தனித்திறமை உள்ளது. பெற்றோர் அதை அடையாளம் கண்டு ஊக்கமளித்தால் அனைவராலும் சாதனை புரிய முடியும் என்பது தர்ஷினி பெற்ற விருதுகள் மற்றும் பதக்கங்கள் மூலம் அறிய முடிகிறது.
ஒவ்வொரு முறையும் எனது மகளை விளையாட்டு போட்டிகளுக்கு அழைத்து செல்லும்போதும் பல செலவுகள் ஏற்படுகிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள எந்த ஒரு பெற்றோராலும் இந்த செலவுகளை ஏற்க முடியாத நிலை உள்ளது. அதனால், விளையாட்டு துறை இதுபோன்ற திறமை மிக்கவர்களுக்கு நிதி உதவி அளித்து வந்தால் பல சாதனையாளர்களை நம் மாநிலத்தில் உருவாக்க முடியும்’ என்றார்.