தில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, கோவையில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட விவசாயிகள் இரத்த கையெழுத்திடும் நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
வறட்சி நிவாரணம், விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 30 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக கோவை சிவானந்தா காலணி பகுதியில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தின் போது இரத்தத்தில் கைரேகையிடும் நூதன போராட்டம் நடத்தினர். தொடர்ந்து ஒரு மாதமாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, இரண்டு லட்சம் கையெழுத்து பெற்று குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு அனுப்ப உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டிய விவசாயிகள், உத்திரபிரதேச மாநிலத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்தது போல தமிழகத்திலும் செய்ய வேண்டுமெனவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.