கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பச்சே கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(75).
அதே பகுதியில் ஆறுமுகத்திற்கு சொந்தமாக 2 ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது. தோப்பில் இருந்த கிணற்றில் தண்ணீர் வற்றிப்போனது. விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாததால் தனது தோப்பில் இரண்டு இடங்களில் போர்வெல் அமைக்க முடிவு செய்தார்.
தொடர்ந்து, சுமார் 3 லட்சம் ரூபாய் வரை செலவழித்து இரு இடங்களில் போர்வெல் அமைத்தார். ஆனால், ஆயிரத்து 300 அடிக்கு மேல் தோண்டியும் தண்ணீர் வரவில்லை. இதனால் மனமுடைந்த ஆறுமுகம் நேற்று மதியம் பூச்சி மருந்து அருந்தினார். இதறிந்த அவரது குடும்பத்தார், அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றனர். ஆறுமுகத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து, 32-வது நாளாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில், வறட்சியினால் கோவையை சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.