மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தில் நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வையே மீண்டும் நடத்த அனுமதி அளிக்க வலியுறுத்தியும் தந்தை பெரியார் திராவிடர் கழகம், எஸ்.எப்.ஐ உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் கடுமையாக கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், எஸ்.எப்.ஐ உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இணைந்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தில் நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வை மீண்டும் நடைமுறைபடுத்த வலியுறுத்தியும் கோசங்களை எழுப்பினர்.
மேலும், காவல்துறையினரின் தடையை மீறி கோவை ரயில் நிலையம் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், ஆர்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர்.