சத்தியமங்கலத்திற்கு உட்பட்ட பவானிசாகர் அணை மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் அமைந்துள்ளது.
இந்த வனப்பகுதிகள் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
கடந்த ஒருமாத காலமாக சரிவர மழை பெய்யாததால் பவானிசாகர் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் யானைகள் குட்டிகளுடன் கூட்டம், கூட்டமாக அணையின் நீர்த்தேக்கப்பகுதியை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், அன்னூர் அடுத்த பவானிசாகர் சித்தன்குட்டையில் நீர் அருந்த வந்த காட்டு யானை ஒன்று சேற்றில் சிக்கியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அதனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து, பல மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு வனத்துறையினர் உதவியுடன் மீட்டெழுந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது.