தில்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், விவசாயிகளை வஞ்சித்து வரும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், இன்று அரசியல் கட்சியினர் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், கம்யூனிஸ்ட் கட்சியினர் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட திமுக மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக், திமுக நகரச் செயலாளர் ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பத்ரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் மண்ணரசன், குன்னூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் சுதாகர் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என 60-க்கும் மேட்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து குன்னூர் சி.எஸ்.ஐ வெஸ்லெ தேவாலய மண்டபத்தில் அடைத்தனர்.