கோவை மாவட்டம், ஆனைகட்டி அருகே அமைந்துள்ளது செம்பிக்கரை கிராமம். அடர்ந்த வனப்பகுதியின் அருகே அமைந்துள்ள இக்கிராமத்தில் நீர் மற்றும் உணவுக்காக காட்டு யானைகள் அவ்வப்போது வருவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று சுமார் 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக செம்பிக்கரையில் உள்ள நீர் குட்டைக்கு வந்துள்ளது. அப்போது குட்டையில் இருந்த நீர் வறண்டு மண் சகதியாக இருந்த நிலையில் யானை அதில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் ஜேசிபி வாகன உதவியுடன் யானையின் உடலை மீட்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, யானையின் உடல் அப்பகுதியிலேயே பிரேத பரிசோதனை செய்யப்படும் என மாவட்ட வன அதிகாரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆனைகட்டி பகுதியிலேயே தண்ணீர் தேடி வந்த யானை உயிரிழந்தது. தொடர்ந்து, கோவை மாவட்டத்திலும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் உள்ள வனப்பகுதிகளில் தொடர்ந்து யானைகள் உயிரிழந்துவருவது குறிப்பிடத்தக்கது.