"மே தினம்" எனும் தொழிலாளர் தினம்


மே தினம் என்பது உலகமெங்கும் பரந்து வாழும் தொழிலாளர்கள் அனுபவித்த வலிக்கு பல சிகிச்சைகள் மூலம் நலன் பெற்ற நாள் என்றும், உழைக்கும் வர்க்கத்தின் உன்னத திருநாள் என்றும் கூறலாம். இத்திருநாள் ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதல் தேதி மாபெரும் பேரணிகளுடன் இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

காலவரையற்ற உழைப்பு, மிருகத்தனமான, கொத்தடிமைத்தனமான இன்னல்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள சீறி எழுந்த தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களினால் முதலாளி வர்க்கத்தின் செவிட்டு செவிப்பறைகளை அடித்து கிழித்து தங்களை விடுவித்துக் கொண்ட தொழிலாளர்களின் வெற்றித் திருநாளே மே தினமாக கொண்டாடப் படுகிறது. 

1856-யில் தொளிலாளர் வர்க்கத்தின் தொடர் போராட்டம் மே 1ம் தேதியன்று விடியல் கண்டது. அதன் காரணமாகவே மே 1ம் தேதி தொழிலாளர்களின் வெற்றி நாளாகவும், விடுமுறை நாளாகவும் ஆஸ்திரேலியாவில் அவதாரம் கண்டது. அந்த விடியல் உலகம் முழுவதும் வியாபிக்க 33 ஆண்டுகள் பிடித்தது. 1889ஆம் ஆண்டு உலகம் முழுவதும் தொழிலார்களின் புரட்சி விழா கொண்டாடப்பட்டது.

மே தின வரலாறு- தொழிலாளர் போராட்டம்:-

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டனர்.

இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது  இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம். சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.

பிரான்சில் தொழிலாளர் இயக்கம்:-

1830 களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834 இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற முழக்கத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம்:-

ஆஸ்திரேலியாவில்  மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856 இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.

ரஷ்யாவில் மே தினம்:-

முதல் மே நாளின் போது உருசியாவில் ஒட்டப்பட்ட சுவரொட்டி சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன.

1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில்:-

அமெரிக்காவில் 1832 இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835 இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது.

பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877 இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.

தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. ரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

சிக்காகோ பேரெழுச்சி:-

மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர்.

இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இந்நிலையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார்.

பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் கறுப்பு தினம்:-

நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.

அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக, உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.

இதனிடையே, பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் “சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்” கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.

இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுசரிக்கப்பட வழிவகுத்தது.

இந்தியாவில் மே தினம்:-

இந்தியாவில் முதல் தொழிலாளர் தினத்தை  பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான சிங்காரவேலர்  1923-இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் கொண்டாடினார்.

தொழிலாளர் வர்க்கம் தனது உழைப்பை, அது உருவாக்கும் அனைத்து செல்வத்தையும் தானே நுகர, தானே தனக்கு அதிபதியாக இருக்க, தனது சொந்த அதிகாரத்தை நிறுவும் நாளாக முன்னிறுத்தி, இந்த மே தினத்திலும் அதை நோக்கி நாம் போராடிப் பெற்றுக் கொள்ள உறுதி கொள்வோம்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...