அரசு மருத்துவ மேற்படிப்பிற்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு மருத்துமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மருத்துவ மேற்படிப்பு படிக்க மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுவந்தது. கடந்த 25 வருடங்களாக இருந்து வந்த இந்த ஒதுக்கீட்டை தற்போது நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்நிலையில் இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கோவை அரசு மருத்துவமனை மருத்துகள் 13-வது நாளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதப்டி, இன்று கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தின் போது, மருத்துவ மேற்படிப்பிற்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் கிராமங்களுக்கு மருத்துவர்கள் செல்லாத நிலை ஏற்படும். உடனடியாக தமிழக அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு அவரச சட்டம் இயற்ற வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.