மத்திய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சிவானந்த காலனி பகுதியில் வருகின்ற மே 6 ஆம் தேதியன்று தொடர் முழக்கப் போராட்டம் நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியர் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்திற்குப் பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய பாஜக அரசு பல்வேறு வகையில் இந்தியை திணித்து வருகிறது. மத்திய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிர்த்து முதற்கட்டமாக வருகின்ற மே 6 ஆம் தேதியன்று கோவை மாவட்டம், சிவானந்த காலனி பகுதியில் அனைத்துக் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும்.
கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு வரை மலையாளம் கட்டாய பாடமாக்கப்பட்டது போல, தமிழகத்திலும் தமிழ் பத்தாம் வகுப்பு வரை கட்டாய பாடமாக்கப்பட வேண்டும். மேலும், இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டத்தை கோவை மாவட்டத்தில் இருந்து துவங்க உள்ளோம். இதனை தொடர் போராட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்தார்.