கோவை மாவட்டம், சிங்காநல்லூர் ஐயர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் இராஜேந்திரன் (35). இவர் இன்று தனது மனைவி சத்யா (30), மகன் நவீன் (13) மற்றும் 10 வயது மகள் தீக்ஷா ஆகியோருடன் சிறுவாணி சாலையில் இன்று தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, ஆலந்துறை அடுத்த மத்துவராயபுரம் அருகே '14 ஏ' எண் கொண்ட காந்திபுரம்- செம்மேடு அரசு பேருந்து வந்துகொண்டிருந்த நிலையில், திடீரென அப்பேருந்து இராஜேந்திரன் குடும்பத்தினர் வந்துகொண்டிருந்த வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் இராஜேந்திரன், அவரது மனைவி சத்யா (30), மகன் நவீன் (13) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி தீக்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தோரின் பிரேதங்களை மீட்டனர். மேலும் இந்த விபத்திற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.