கோவை-பொள்ளாச்சி சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவ்வழியே செல்லும் பேருந்துகள் தாறுமாறாக அதிக வேகத்தில் செல்வதாக புகார் எழுந்தது. இது தொடர்பான காணொலி சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வாகன ஓட்டிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதிவேகமாக பேருந்துகளை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றதை தொடர்ந்து, பொள்ளாச்சி சார் ஆட்சியர் சம்பந்தப்பட்ட பேருந்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து, தனியார் பேருந்து உரிமையாளர்களிடையே அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் அதி வேகத்தில் பேருந்தை இயக்க கூடாது என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில், தற்போது கோவை-சத்தி சாலையில் இயக்கப்படும் பேருந்துகளும் அசுர வேகத்தில் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
குறுகலான நெடுஞ்சாலையான கோவை-சத்தி சாலையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள் போட்டி போட்டுக்கொண்டு பேருந்துகளை இயக்கி வருகினறனர். இது தொடர்பான காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. எதிரே வரும் வாகனங்களை பொருட்படுத்தாமல் பேருந்தின் ஓட்டுனர் ஒற்றை பாதையில் அதிவேகமாக பேருந்தை இயக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
இது மற்ற வாகன ஓட்டிகளின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அதிகாரிகள் இப்பிரச்சனையில் தலையிட்டு அதிவேகமாக பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள் நடவடிக்கை எடுப்பதோடு, அந்த பேருந்தை பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.