கோவை மாநகராட்சி சார்பில் நவீன கட்டண கழிப்பிடம் கட்டப்பட்டு, வருடந்தோறும் குத்தகைக்கு விடப்படுகிறது. இவற்றில் வசூலிக்க வேண்டிய கட்டணத்தையும் மாநகராட்சி நிர்வாகமே நிர்ணயித்து வந்தது. இதன்படி, சிறுநீர் கழிக்க ஒரு ரூபாய் மற்றும் குளிக்க 3 ரூபாய் என கட்டணம் நிர்ணயித்து, இது குறித்த அறிவிப்புப் பலகையையும் அந்தந்த கட்டண கழிப்பிடங்கள் முன்பாக மாநகராட்சி நிர்வாகம் வைத்துள்ளது.
ஆனால் தற்போது கோவையில் ஒருசில கட்டண கழிப்பிடங்களில் தான் இந்த அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். மற்ற இடங்களில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகைக்கான இடம் மறைக்கப்பட்டு, பொதுமக்களிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக அளவில் வசூல் செய்கின்றனர்.
தற்போது இந்த சம்பவம் உக்கடம் பேருந்து நிலையத்தில் உள்ள மத்திய மண்டலத்திற்குட்பட்ட நவீன கட்டண கழிப்பிடத்தில் அரங்கேறி வருகிறது. இதனை 2017-18ம் ஆண்டிற்கான குத்தகையை ரஹ்மத்துல்லா என்பவர் எடுத்து நடத்தி வருகிறார். சிறுநீர் கழிக்க ஒரு ரூபாய் வாங்காமல் 3 ரூபாயும், குளிக்க 3 ரூபாய் என நிர்ணயித்த கட்டணத்தை விட, தற்போது 15 ரூபாய் என வசூலிக்கப்படுகிறது. இவ்வாறாக அதிகப்படியாக வசூலிக்கப்படும் கட்டணங்களுக்க ரசீதும் கொடுப்பதில்லை. இதன்மூலம் பொதுமக்களும் போதிய ஆதாரம் இல்லாமல் நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட தயங்கி வருகின்றனர். தமிழகம் முழுக்க இந்த பிரச்சனை இருந்தாலும், ஒரு சில உள்ளாட்சி நிர்வாகங்கள் உறுதியான நடவடிக்கை எடுத்து இந்த முறைகேட்டைத் தடுத்துள்ளன.
அதேபோல், கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கடந்த ஜனவரி மாதம் மத்திய மண்டலம், வார்டு எண் 54-க்குட்பட்ட காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் உள்ள நவீன கட்டண கழிப்பிடத்திற்கு அதிக கட்டணம் வசூல் செய்தது தொடர்பாக புகார் வரப்பெற்றதை தொடர்ந்து அதிக கட்டணம் வசூலித்ததால் குத்தைகைதாரர் வேலுச்சாமி என்பவர் செலுத்தியுள்ள வைப்புத் தொகையை பறிமுதல் செய்து குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து கோவை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஒருவரிடம் தொடர்பு கொண்டபோது, பொதுமக்கள் பாதிக்கும் வகையில் அதிக அளவில் கட்டணம் வசூல் செய்யும் கட்டண கழிப்பிட குத்தகைதாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாநகராட்சி ஆணையரிடம் புகார் வரப்பெற்றால் அப்புகாரின் மீது குறித்து குறிப்பிட்ட கழிப்பிடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும்" என்றார்.
அத்யாவசியத் தேவையான கழிப்பிடங்களில், அதுவும் மாநகராட்சியால் குத்தகைக்கு விடப்பட்ட கட்டணக் கழிப்பிடங்களில் அதிகளவில் வசூலில் ஈடுபடும் குத்தகைதாரர்களஙன உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கோவை மத்திய மண்டலத்திற்குட்பட்ட நவீன கட்டண கழிப்பிடத்தில் அதிக அளவில் கட்டணக்கொள்ளையில் ஈடுபட்ட குத்தகைதாரர் மீது கோவை மாநகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.