தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் மூட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் அவ்வாறாக செயல்பட்டு வந்த 186 கடைகள் மூடப்பட்டது.

இதனிடையே மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை குடியிருப்பு பகுதியில் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்டம், ஒலம்பஸ் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தக் கடை ஒலம்பஸ் அருகே உள்ள சாவித்திரி நகர் பின்புரத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு மக்களின் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்டது.
இப்பகுதி, பள்ளி செல்லும் குழந்தைகள் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதி என்பதாலும், கோவில்கள் உள்ளிட்டவை உள்ளதால் பெண்கள் சாலையில் செல்லும் போது டாஸ்மாக் கடைக்கு வரும் மதுபிரியர்களால் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதாலும் தொடர்ந்து அந்தக் கடையினை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து, இன்று திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், பாமக, நாம் தமிழர் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்த அப்பகுதி பொதுமக்கள் குறிப்பிட்ட டாஸ்மாக் கடையினை முற்றுகையிட முயன்றனர். இதனைடையே, டாஸ்மாக் கடை முன்பாக 200 மீட்டர் தொலைவில் பாரதிநகர் என்னும் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் டாஸ்மாக் முற்றுகையில் ஈடுபட்ட அனைவரையும் தடுத்து நிறுத்தினர்.
முன்னதாக, மக்களின் எதிர்ப்பை மீறி குடியிருப்பில் டாஸ்மாக் கடையினை அமைக்கும் அரசினைக் கண்டித்தும், இந்த டாஸ்மாக் கடையினை அகற்றக்கோரியும் முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்த அனைத்துக் கட்சியினரும், சாவித்திரி நகர் பொதுமக்களும், இந்த டாஸ்மாக் கடையினை அகற்றக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக நாம் தமிழர் கட்சியினர், டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசிற்கு சவப்பெட்டி அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பீளமேடு பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக-வினர் ஆர்ப்பாட்டம்
இதேப்போன்று, பீளமேடு அருகே, ரொட்டிக்கடை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைக்கு (எண்: 1516) எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் மகேஸ்வரி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில், அப்பகுதி பொதுமக்கள் உட்பட 25-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தமிழக அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும், தமிழக அரசிற்கு வேட்டி, சேலை, மஞ்சல், குங்குமம், வளையல், பூ உள்ளிட்டவற்றை அனுப்பி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 25-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.