கோவை மாவட்டத்தில் மாநகராட்சி வசம் உள்ள பல்வேறு கட்டணக் கழிப்பிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதுகுறித்தான செய்தியும் நமது சிம்ளிசிட்டி-யில் "கோவை மாநகராட்சி நவீன கட்டண கழிப்பிடத்தில் குளிக்க 15 ரூபாயா? மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?" என்னும் தலைப்பில் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, தற்போது கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின்படி மத்திய மண்டலத்திற்குட்பட்ட 3 நவீன கழிப்பிடங்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்த குத்தகைதாரர்களுக்கும் மற்றும் நிறுவனத்திற்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், மத்திய மண்டலத்திற்குட்பட்ட நவீன கழிப்பிடங்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் தெரிவித்ததன் அடிப்படையில், வார்டு 82-ல் உக்கடம் பேருந்து நிலையத்திற்குள் உள்ள நவீன கட்டண கழிப்பிடத்தில் உதவி ஆணையர் தலைமையில் உதவி வருவாய் அலுவலர், சிறப்பு வரி ஆய்வாளர் மற்றும் வரிவசூலர் ஆகியோருடன் கடந்த மே 9ம் தேதி ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் பொது மக்களிடம் நவீன கட்டணம் கழிப்பிடத்தில் மாநகராட்சி நிர்ணயம் செய்யப்பட்ட சிறுநீர் மற்றும் மலம் கழிக்க ரூ.1 மற்றும் குளியலறை கட்டணம் 3 ரூபாயினை வசூலிக்காமல் கூடுதலாக ரூ.3 மற்றும் ரூ.10 ஆகிய தொகை வசூல் செய்வது கண்டறிப்பட்டது.
மேற்படி நவீன கட்டண கழிப்பிடம் குத்தகைதாரர் ஏ.மு.ரஹ்மத்துல்லாவிற்கு இரண்டாம் ஆண்டுக்கு (2017-2018) புதுப்பித்து குத்தகை தொகை ரூ.15,02,550-க்கு ஒப்படைக்கப்பட்டது.
மேலும், மாநகராட்சி நிர்ணயம் செய்யப்பட்ட சிறுநீர் மற்றும் மலம் கழிக்க ரூ.1 மற்றும் குளியலறை கட்டணம் ரூ.3 யினை வசூலிக்காமல் கூடுதலாக தொகை வசூல் செய்து மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்திய மேற்படி குத்தகைதாரருக்கு மாநகராட்சி நிபந்தனைகளை மீறியதால் தற்போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் உத்தரவின் பேரில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதே போல் உக்கடம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள நவீன கட்டண கழிப்பிட பராமரிப்பினை தி/ள். டாய்லெட் ரூ டாய்லெட் (பி) லிமிடெட் நிறுவனத்திற்கு பொறியியல் பிரிவு மூலம் “BOT” அடிப்படையில் 20 ஆண்டுகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் 23.08.2006 முதல் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், பொது மக்களிடம் நவீன கட்டணம் கழிப்பிடத்தில் மாநகராட்சி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தொகையை விட கூடுதலாக சிறுநீர் மற்றும் மலம் கழிக்க ரூ.5 மற்றும் குளியலறை கட்டணம் ரூ.10 தொகை வசூல் செய்வது கண்டறியப்பட்டு மே 9ம் தேதி மாலை 4.30 மணியளவில் பூட்டப்பட்டு, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் உத்தரவின் பேரில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கபட்டுள்ளது.
மேலும், வார்டு எண். 84 உக்கடம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள பொது கழிப்பிடத்தினை எம்/எஸ் சேனிட்ஸ் டெக்னாலஜி நிறுவனத்திற்கு பொறியியல் பிரிவு மூலம் பராமரிப்பு செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு பணிபுரிந்த பணியாளர் பொதுமக்களிடம் சிறுநீர், மலம் கழிக்க ரூ.5 மற்றும் குளியலறை கட்டணம் ரூ.15 வசூல் செய்வது கண்டறிப்பட்டது.
பராமரிப்பு பணிக்கு மாநகராட்சியிடம் உரிய தொகை பெற்றுக்கொண்டு பொது மக்கள் இலவசமாக பயன்படுத்த அனுமதிக்காமல் மாநகராட்சி நிபந்தனைகளை மீறி பொது மக்களிடம் கட்டணங்கள் வசூல் செய்து மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்திய மேற்படி நிறுவனத்திற்கு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் உத்தரவின் பேரில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற மாநகராட்சியின் கட்டண கழிப்பிடங்களில் மாநகராட்சி நிர்ணயித்த தொகையை விட அதிக கட்டணம் வசூலிக்கும் குத்தகைத்தாரர்கள் மீது மாநகராட்சி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், குத்தகைதாரரின் உரிமம் ரத்து செய்யப்படும் என கோவை மாநகராட்சி எசிசரிக்கை விடுத்துள்ளது.