கோவை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து வரும் வறட்சியின் காரணமாக அத்யாவசியத் தேவைக்குக்கூட நீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் நீரும் இரு வாரத்திற்கு ஒரு முறை, மாதத்திற்கு ஒரு முறை என்றே விநியோகிக்கப்பட்டு வருகிறது. அந்த தண்ணீரும் மக்களுக்கு போதுமானதாக இல்லை என குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

இந்நிலையில், தற்போது மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் நீரும் சாக்கடை நீர் கலந்து வருவதாக வைசியால் பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இன்று வைசியால் வீதி வித்யாலயா பள்ளி அருகே குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், அந்த நீர் முழுவதும் சாக்கடை நீர் கலந்து கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், வைசியால் உள்ளிட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதுபோன்றே சாக்கடை நீர் விநியோகிக்கப்படுவதாகவும், இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாக்திடம் புகார் அளித்தும் எவ்வித பயனும் இல்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.