தாராபுரம் உப்பர் டேம் பகுதியில் வசிப்பவர் மோகன். இவரது மகள் அஞ்சு (19). பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர்கள் தாராபுரம் பகுதியில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் பணியாற்றி வந்தனர். அங்கு திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சஞ்சீவ் (23) என்பவரும் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், அஞ்சு மற்றும் சஞ்சீவுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அஞ்சு நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த எலி மருந்தை உண்டு தற்கொலை செய்ய முயன்றார். இதையறிந்த அவரது பெற்றோர், அஞ்சு-வை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதித்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அஞ்சு இன்று காலை பரிதாபமாக பலியானார். காதலி விஷம் அருந்தியதை அறிந்த சஞ்சீவ் நேற்று விஷம் குடித்தார். இதையறிந்த அவரது நண்பர்கள் சஞ்சீவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். தற்போது சஞ்சீவ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.