தமிழகம் முழுவதும் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து கடந்த 13-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, கோவை மாநகரில் துணை ஆணையராக (போக்குவரத்து) பணியாற்றி வந்த சரவணன் சென்னை பெருநகர தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
கோவை மாநகரின் புதிய துணை ஆணையராக (போக்குவரத்து) துரை நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று காலை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த துரை-க்கு காவல்துறை அதிகாரிகள், பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், கோப்புகளில் கையொப்பமிட்ட அவர், கோவை மாநகரின் போக்குவரத்து துணை ஆணையராக பதவியேற்றுக்கொண்டார்.

இதை தொடர்ந்து, அவர் சிம்ப்ளி-சிட்டி க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கோயம்புத்தூர் மாவட்டத்தை நன்கு அறிந்தவன் நான். எனது கல்லூரி படிப்பை இங்கு தான் முடித்தேன். போக்குவரத்து சம்பந்தமாக கோவை மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை உணரமுடிகிறது. பொதுமக்களிடம் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வலியுறுத்துவது மட்டுமின்றி, கோவை மாநகரை போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்டமாக மாற்ற திட்டங்களை செயல்படுத்துவேன். திட்டங்கள் வருங்காலத்தை நோக்கி பயணிப்பதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.