இறைச்சிக்காக மாடுகளை சந்தையில் விற்க தடை விதித்த மத்திய அரசை கண்டித்து போத்துனூர் செட்டிபாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. விவசாய காரணங்களுக்கான மாடுகளை விற்க, வாங்க புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ள மத்திய அரசு மிருகவதைக்கு எதிராகவும் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசு இன்று பிறப்பித்துள்ளது.
இதையடுத்து, எருமை மாடு, பசு மாடு, காளை மற்றும் ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. விவசாய பணிகளுக்காக மட்டும் விவசாயிகள் சந்தைகளில் மாடுகளை விற்க மத்திய அரசு அனுமதி தந்துள்ளது.கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்வதற்கும் புதிய விதிகளை மத்திய அரசு வகுத்துள்ளது., அதில் குறிப்பாக கால்நடைகள் சந்தைகளுக்கு கொண்டு வரப்படும் போது துன்புறுத்த கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு உடனே திரும்ப பெற வலியுறுத்தி கோவை தெற்கு மாவட்ட மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் சங்கத்தினர் போத்தனூர் செட்டிபாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாட்டின் தோலை ஏற்றுமதி செய்யும் மத்திய அரசு, ஜனநாயக நாட்டில் மாட்டிறைச்சி உணவு உண்ணுவதற்கு தடை விதிப்பதை எதிர்த்தும் கோஷங்களை எழுப்பினர். மேலும் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.