கோவை, செல்வபுரம் அடுத்த தெலுங்கு வீதி பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வெரைட்டிஹால் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து உடனடியாக அங்கு விரைந்த காவல் துறையினர் அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தடைசெய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அவர் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் ஸ்ரீனிவாசன் (41) என்பதும், கேரள லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த லாட்டரி மற்றும் 30 ஆயிரத்து 750 ரூபாய் பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், வழக்கு பதிவு செய்த காவலர்கள், ஸ்ரீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.